நெல்லை மாநகரில் இன்னுமொரு பெண்கள் கல்லூரி வேண்டும் என்ற நெல்லை மக்களின் நீண்டநாள் விருப்பம், இக்கல்லூரி வரவால் 1970-ம் வருடம் நிறைவேறியது. மாநில அரசின் உதவியோடு நெல்லை மக்கள் ஒத்துழைப்பும் ஒருசேரக் கிட்டியதால் இக்கல்லூரி நன்கு வளர வாய்ப்பேற்பட, நெல்லை மாவட்ட ஆட்சியாளரைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கல்லூரிக் குழுவில் நெல்லை வாழ் ஆன்றோர் சிலரும் உறுப்பினர்களாயினர். கல்லூரிக் குழுவிலுள்ள மக்கள் கட்டிட நிதிக்காக 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தனர். நெல்லையிலுள்ள காந்திநகர் பகுதியில் செயல்படும் இக்கல்லூரியின் நிரந்திரக் கட்டடத்திற்காக அருகிலுள்ள அபிஷேகப்பட்டி அரசு கால்நடைப் பண்ணையிலிருந்து 40 ஏக்கர் நிலத்தைப் பெற்றது.
முதன் முதலாக இக்கல்லூரி காந்திநகரில் வாழ்ந்த பெற்றோர்களின் பேருதவியால் காந்திநகர் விநாயகர் கோவில் அருகில் கூரை வேய்ந்த தற்காலிக அறைகளில் ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால் பொதுநல நோக்கும், நல்லெண்ணமும் கொண்ட காந்திநகர் மக்களுக்கு முதற்கண் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ஆரம்பத்தில் இக்கல்லூரி மறைந்த முதலமைச்சர் திரு. அண்ணாதுரையின் மனைவி திருமதி. இராணி அண்ணாதுரை அவர்கள் பெயரில் "இராணி அண்ணாதுரை மகளிர் கலைக் கல்லூரி" என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு தற்காலிகக் கூரைக்கூடங்களில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி விரைவில் நிரந்தரமான கற்கட்டடங்களில் செயல்படும் என்ற நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்தது
இவ்வாறாக 1970- ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 69 மாணவிகளைக் கொண்ட புதுமுக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அரசு வழங்கிய 10.5 இலட்சம் ரூபாயில் 1971 - ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக் கட்டடத்திற்கு அந்நாள் தமிழகக் கல்வி அமைச்சர் டாக்டர். நெடுஞ்செழியன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டில் புதுமுகக் கலை வகுப்புகளுக்கு இணையான ஆங்கில வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
எத்தனைக் கல்லூரிகள் வந்தாலும் மாணவியரின் சேர்க்கை இங்கு வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. கல்லூரியிலும் புதிது புதிதாகப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஒரு பாடப் பிரிவினைக் கொண்டு இயங்கிய கல்லூரி தற்போது ஆய்வுப் பிரிவுகள் வரை வளர்ந்து நிற்கின்றது.
Students
Courses
Staff
Books